40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்


40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
x

நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் இடம் பெறும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் இடம் பெறும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை ரெயிலடியில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியினர், அ.ம.மு.க. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் வேலு.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணி வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:-ஜெயலலிதா குடியிருந்த கோவிலாக நாங்கள் நினைக்கின்ற கோடநாடு பங்களாவில் எப்படி கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொலை, கொள்ளையில் பல மர்மங்கள் இருக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 90 நாட்களில் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம் என அன்றைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இன்றைக்கு 900 நாட்கள் ஆகிவிட்டது. என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?.

மண் குதிரைகள்

எங்களை பார்த்து தி.மு.க.வின் பி டீம் என்று சொல்கிறார்கள். இந்த வழக்கை விசாரிக்காததால் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக இருக்கிறார்களோ? என மக்கள் சந்தேகிக்கிறார்கள். தி.மு.க.வின் பி டீம் எடப்பாடி பழனிசாமி என்று மக்கள் சந்தேகித்து கொண்டு இருக்கிறார்கள். முதல்அமைச்சர் வசித்த வீட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக எத்தனையோ ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.யார் குற்றவாளி என மக்களுக்கு தெரிய வேண்டும். ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் மண் குதிரைகள் என ஜெயக்குமார் சொல்கிறார். மண் குதிரை என்று சொல்கின்ற ஓ.பன்னீர்செல்வம் தான் எடப்பாடி பழனிசாமியை 4½ ஆண்டுகள் முதல்-அமைச்சராக்கி அழகு பார்த்தார். டி.டி.வி.தினகரன் தான் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கினார்.இரட்டைஇலை சின்னம் மட்டும் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லையென்றால் எல்லா தொகுதிகளிலும் 2 ஆயிரம் வாக்குகள் கூட வாங்க முடியாது. இரட்டைஇலை சின்னம் மட்டும் இல்லையென்றால் அகதிகளை போல் எடப்பாடி பழனிசாமி கட்சியினர் சந்திக்கு சந்தி நிற்பார்கள். ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் இணைந்துவிட்டார்கள். இந்த சக்திகளை விட்டுவிட்டு தமிழகத்தில் யாரும் ஆட்சிக்கு வர முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

40 தொகுதிகளில் வெற்றி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கோடநாடு வழக்கில் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இதை அடிப்படையாக வைத்து தான் இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் எந்த கூட்டணியில் இடம் பெறுகின்றனரோ அந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.


Next Story