கொற்கை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டார்


கொற்கை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட  பழங்கால பொருட்களை கலெக்டர்  செந்தில் ராஜ் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொற்கை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டார்

தூத்துக்குடி

ஏரல்:

கொற்கை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.

கொற்கையில் அகழாய்வு

பழங்கால தமிழர்களின் துறைமுக நகராக சிறப்புற்று விளங்கிய தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கையில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு நடைபெற்றது. இங்கு பழங்கால மக்களிடன் வாழ்விட பகுதிகள், சங்கு அறுக்கும் கூடம், சங்கு ஆபரணங்கள், செங்கல் கட்டுமானம் போன்றவை கண்டறியப்பட்டது.

தொடர்ந்து பழங்கால கொற்கை துறைமுக பகுதிகளை கண்டறியும் வகையில், தமிழக தொல்லியல் துறை சார்பில் கடல்சார் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரையிலும் கடல் வழியாக கடல்சார் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் முன்கள ஆய்வு தொடங்கப்பட்டது.

பழங்கால பொருட்கள்

இந்த நிலையில் கொற்கை சுற்றுலா விளக்க கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த பழங்கால பொருட்கள், வரைபடங்கள் போன்றவற்றை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று பார்வையிட்டார். பின்னர் அப்பகுதியில் உள்ள பழமையான வன்னிமரம், கொற்கை குளம் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், வெற்றிவேல் செழியநங்கை கோவில் என்று அழைக்கப்படும் கண்ணகி கோவிலுக்கும் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அக்கசாலை விநாயகர் கோவிலில் உள்ள பழங்கால கல்வெட்டுகளையும் பார்வையிட்டார்.

அப்போது கொற்கைக்கு சீராக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர். தாசில்தார் கண்ணன், ஆறுமுகமுகமங்கலம், வருவாய் ஆய்வாளர் முத்து சரவணன், கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ், முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story