அலங்கார விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள்
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில், அலங்கார விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள் அமைக்கப்பட உள்ளது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலின் இதய பகுதியாக திகழும் நட்சத்திர ஏரியில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரியில் வளர்ந்துள்ள நீர் தாவரங்களை அகற்ற நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஏரியின் உட்புறத்தில் அலங்கார விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்றுக்கள் 3 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, 3 எந்திரங்கள், தற்போது ஏரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. வல்லுனர் குழு ஆலோசனைப்படி, நீரூற்று எந்திரங்களை எந்த இடத்தில் நிறுத்தலாம் என்று முடிவு செய்யப்படும்.
கொடைக்கானல் பகுதியில் பகல் நேரத்தில் சுற்றி பார்க்க பல்வேறு இடங்கள் இருந்த போதிலும், இரவு நேரத்தில் பொழுதுபோக்கு மையங்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்த செயற்கை நீரூற்றுகள் அமைவதன் மூலம் சுற்றுலா பயணிகள், இரவு நேரத்தில் ஏரியை கண்டுகளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஏரியில் நடைபெறுகிற அனைத்து பணிகளும் குளு, குளு சீசன் தொடங்குவதற்கு முன்பு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.