சப்-கலெக்டர் என்று கூறி 5 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.44 லட்சம் மோசடி விருத்தாசலம் தம்பதி கைது


சப்-கலெக்டர் என்று கூறி    5 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.44 லட்சம் மோசடி  விருத்தாசலம் தம்பதி கைது
x

சப்-கலெக்டர் என்று கூறி 5 பேரிடம் அரசு வேலைவாங்கி தருவதாக ரூ.44 லட்சம் மோசடி செய்த விருத்தாசலம் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபார்த்தசாரதி மகன் ஜெயமாதவசாரதி (வயது 34). இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் மனு அளித்தார். அதில், விருத்தாசலம் அருகே பெருவரப்பூர் கிராமத்தை சேர்ந்த சுதாகர் (44), அவரது மனைவி சகாய விண்ணரசி என்கிற விண்ணரசி (42) ஆகிய 2 பேரும் தனது நண்பர் மூலம் அறிமுகமானார்கள்.

அப்போது விண்ணரசி அரியலூர் மாவட்டத்தில் சப்- கலெக்டராக வேலை பார்த்து வருவதாகவும், தனக்கு மத்திய, மாநில அரசுஅதிகாரிகள் நிறைபேர் பழக்கம் உள்ளதாகவும், அதன் மூலம் உங்களுக்கு மத்திய அரசு பணியில் உதவி இயக்குனர் பணியிடம் வாங்கி தருவதாகவும் ஆசைகாட்டி உறுதி அளித்தார்.

மோசடி

இதற்காக ரூ.11 லட்சம் தருமாறு கேட்டார். அதன்படி நான், விண்ணரசி, அவரது கணவர் சுதாகர் ஆகிய 2 பேரி டம் ரூ.11 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தனர். பின்னர் ரூ.1 லட்சத்தை மட்டும் தந்து விட்டு மீதி பணம் ரூ.10 லட்சத்தை மோசடி செய்து விட்டனர்.

இதேபோல் சிதம்பரம் கொடிப்பள்ளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் திருமுருகன் என்பவரிடம் ராணுவ கேண்டீனில் கண்காணிப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம், சிதம்பரம் நற்கரவந்தன்குடியை சேர்ந்த கண்ணபிரானிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம், சிதம்பரம் கீழமூங்கிலடியை சேர்ந்த சிவனேசன் மகன் சிவகுருநாதனிடம் ரூ.3 லட்சத்து 47 ஆயிரம், குறிஞ்சிப்பாடி மீனாட்சிபேட்டையை சேர்ந்த லட்சுமணன் என்பவரிடம் சமூக நலத்துறையில் உதவி இயக்குனர் வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் என மொத்தம் ரூ.44 லட்சத்து 27 ஆயிரம் மோசடி செய்து விட்டதாக தெரிவித்தார்.

தம்பதி கைது

புகார் மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, அதை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலா மற்றும் போலீசார், அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விண்ணரசியின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு அவருக்கு ராணுவ கேண்டீனில் மேலாளர் வேலை கிடைத்ததை வேண்டாம் என்று கூறி விட்டு, சுதாகரை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வேலையில்லாமல் இருந்து வந்த நிலையில், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த நபர்களிடம் அரியலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், சப்-கலெக்டர், துணை கலெக்டர் என கூறி, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.44 லட்சத்துக்கு மேல் மோசடி செய்தது தெரிய வந்தது. அவ்வப்போது வீடுகளை மாற்றி வடலூர், சிதம்பரம், விருத்தாசலம் பகுதிகளில் வசித்து வந்ததும், மோசடி செய்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story