திண்டுக்கல்லில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி; வாலிபர் கைது
திண்டுக்கல்லில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் நாகல்புதூரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு ரூ.10 லட்சம் கடன் தேவைப்பட்டது. அப்போது நிலக்கோட்டையை சேர்ந்த ரமேஷ்பாபு (34) என்பவர் அறிமுகம் ஆனார். இதையடுத்து அவரிடம் கடன் பெற்று தரும்படி குணசேகரன் கூறினார். அதன்படி ரமேஷ்பாபு, தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி குணசேகரனுக்கு கொடுத்தார்.
பின்னர் நிதிநிறுவனத்தில் வட்டி அதிகம் என்று கூறிய ரமேஷ்பாபு, வங்கியில் கடன் வாங்கி தருவதாக தெரிவித்தார். மேலும் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கிய ரூ.10 லட்சத்தை திரும்ப செலுத்த தனது வங்கி கணக்குக்கு மாற்றும்படி ரமேஷ்பாபு கூறியுள்ளார். அதை உண்மை என நம்பிய குணசேகரன் ரூ.10 லட்சத்தை ரமேஷ்பாபுவின் வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளார்.
ஆனால் வங்கியில் கடன் வாங்கி கொடுக்காததோடு, ரூ.10 லட்சத்தை அவரே வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் குணசேகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்பாபுவை கைது செய்தனர்.