ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18¾ லட்சம் மோசடி 5 பேர் மீது வழக்கு
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18¾ லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாபுராஜ். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு அளித்தார் அதில், விழுப்புரம் மாவட்டம் ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவரும், சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கடந்த 2017-ம் ஆண்டு எனக்கு அறிமுகமானார்கள்.
அவர்கள் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறினார்கள். இதை நம்பி, நான் என்னுடன் ராமலிங்கம், தேவி, மகாலிங்கம், சுந்தரவல்லி ஆகியோர் வாடகை காரில் சென்னைக்கு சென்று அவர்களை சந்தித்தோம். அப்போது என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ஹரிகுமார் என்பவர் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
அவர்கள் எங்களிடம் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்ததன் பேரில், நாங்கள் 5 பேரும் சேர்ந்து ரூ.18 லட்சத்து 80 ஆயிரத்தை பல்வேறு தவணைகளாக அவர்களிடம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வேலை வாங்கி தராமல் ஏமாற்றிவிட்டனர். பணத்தை திரும்பி தராமல், மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, இந்த மனுமீது குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், ஹரிகுமார், சக்திவேல், ஜெயக்குமார் மற்றும் அரிக்குமார், சரவணன் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.