அரசு ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக ரூ.2¾ லட்சம் மோசடி; 2 பேர் மீது வழக்கு
அரசு ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக ரூ.2¾ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சஞ்சய் காந்தி தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 59). இவர், தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனது மகன் ராஜ்விக்னேஸ்வரனும் (30), சுக்குவாடன்பட்டி ஜெயம்நகரை சேர்ந்த விஜய்பாண்டியன் (30) என்பவரும் நண்பர்கள்.
அந்த வகையில் 7 ஆண்டுகளாக அவரை எனக்கு தெரியும். அவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா மேல்சேவூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திகேயன் (36) என்பவரை, டாக்டர் என்று கூறி எனக்கு அறிமுகம் செய்தார். கார்த்திகேயன் மூலம் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் எனது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக அவர்கள் கூறினர். அதற்கு ரூ.3 லட்சம் செலவு ஆகும் என்றார்கள். நான் ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் அவர்களிடம் கொடுத்தேன். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டனர்" என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக விஜய்பாண்டியன், கார்த்திகேயன் ஆகிய 2 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.