பெண் டாக்டரிடம் 2 பவுன் மோசடி
பெண் டாக்டரிடம் 2 பவுன் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் பாரதிநகர் டி.பிளாக் பஸ்நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது யாசர் அராபத் என்பவரின் மனைவி ஷானாஸ் பாசில்லா (வயது 30). டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் மாலை நேரத்தில் ராமநாதபுரம் குமரைய்யா கோவில் அருகே உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று மாலை உடற்பயிற்சிக்கு சென்ற போது தனது 2 பவுன் வளையல்களை பயிற்சிக்கு இடையூறாக இருக்கும் என்று கருதி உடற்பயிற்சி கூட உரிமையாளரான ஷைன் என்பவரின் மனைவி ஐனுல் ஜெசிமா பேகத்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் அவர் நகையை வாங்காமல் மறந்து வீட்டுக்கு சென்றாராம்.
பின்னர் அவர் செல்போன் மூலம் அழைத்து ஐனுல் ஜெசிமா பேகத்திடம் கேட்டபோது அடுத்த 2 நாட்கள் உடற்பயிற்சி கூடம் விடுமுறை என்பதால் அதற்கு அடுத்த நாள் வாங்கி கொள்ளுமாறு கூறினாராம். இதன்படி 2 நாட்கள் கழித்து சென்று வளையலை கேட்டபோது தன்னிடம் எந்த நகையும் தரவில்லை என ஐனுல் ஜெசிமா பேகம் கூறினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷானாஸ் பாசில்லா ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.