கலெக்டர் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் பயன்படுத்தி மோசடி முயற்சி


கலெக்டர் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் பயன்படுத்தி மோசடி முயற்சி
x

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் பயன்படுத்தி மோசடி முயற்சியில் ஈடுபட்ட மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் மூலமாக ஒரு தகவல் வந்துள்ளது. அந்த வாட்ஸ் அப்பில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவின் புகைப்படம் `டி.பி.'யாக வைக்கப்பட்டிருந்தது. வாட்ஸ்-அப் அனுப்பிய நபர் வருவாய் கோட்டாட்சியரிடம் தான் அமேசான் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், உங்களுக்கு அமேசான் நிறுவனம் இலவசமாக கிப்ட் கார்டு மற்றும் வவுச்சர் கொடுக்க உள்ளதாகவும் அதை குறிப்பிட்ட தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளுமாறு வாட்ஸ்-அப்பில் ஷேர் செய்துள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த வருவாய் கோட்டாட்சியர் உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு இதனை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அந்த வாட்ஸ்-அப் நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது இந்தியில் பேசியதாக தெரிய வந்துள்ளது. மேலும் ட்ரூகாலரில் பரிசோதித்த போது அந்த நபர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடைய பெயர் ஆகாஷ் என்பதும் தெரியவந்துள்ளது. மாவட்ட கலெக்டரின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட முயன்ற நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story