ரூ.10 லட்சம் தருவதாக கூறி வீட்டுமனையை கிரையம் செய்து மோசடி
ரூ.10 லட்சம் தருவதாக கூறி வீட்டுமனையை கிரையம் செய்து மோசடி செய்து விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் என்.எல்.சி. தொழிலாளி மனு கொடுத்தார்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், அரியலூர் மாவட்டம் ஏலக்குறிச்சியை சேர்ந்த என்.எல்.சி. தொழிலாளி ரவி (வயது 55) என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
என்.எல்.சி.யில் பணிபுரிந்து வரும் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போது, பணம் தேவைப்பட்டது. அப்போது எனது நண்பர் மனோகரன் மூலம் நெய்வேலியை சேர்ந்த வக்கீல் ஒருவர் அறிமுகமானார். பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட எனக்கு அவர் பண உதவி செய்வதாக தெரிவித்தார். அதற்கு அவர், சென்னை தாம்பரத்தில் இருக்கும் இடத்தை அடமானம் செய்து கொடுக்க வேண்டும் என்றார். அப்போது ரூ.10 லட்சம் கொடுப்பதாக பேசியிருந்தோம். இதை நம்பிய நான், அவருடன் சென்னை தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று கையொப்பமிட்டேன். ஆனால் அவர்கள் கூறியபடி ரூ.10 லட்சம் தரவில்லை. அப்போது தான் அந்த வக்கீல் அவரது நண்பரது பெயருக்கு எனது நிலத்தை கிரையம் செய்து மோசடி செய்தது தெரியவந்தது. எனவே எனது வீட்டுமனையை அடமானம் வைப்பதாக நம்ப வைத்து ரூ.10 லட்சம் தராமல் ஏமாற்றியதுடன், வீட்டுமனையை கிரையம் செய்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.