கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி; விருத்தாசலம் நீதிமன்ற ஊழியர் கைது !


கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி; விருத்தாசலம் நீதிமன்ற ஊழியர் கைது !
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 8:07 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி செய்த விருத்தாசலம் நீதிமன்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியவடவாடி நடுத்தெருவை சேர்ந்தவர் கலைச்செழியன் (வயது 52). விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண்- 3-ல் பதிவறை எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு பழக்கமான விருத்தாசலம் கடைவீதியில் காபி கடை நடத்தி வரும் ரகுநாதன் மகன் ஸ்ரீராம் என்பவரிடம், தனக்கு நிறைய நீதிபதிகள் தெரியும், எல்லோரும் எனக்கு நன்கு பழக்கம் ஆனவர்கள். அவர்களிடம் கூறி, உனக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி உள்ளார். அதற்காக ரூ.3 லட்சம் கேட்டுள்ளார்.இதை உண்மை என்று நம்பிய அவரும், கலைச்செழியனிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்தார். இதேபோல் பெண்ணாடம் கடை வீதியில் கணினி மையம் நடத்தி வரும் கோவிந்தராஜ் மகன் சண்முகசுந்தரம் என்பவரிடமும் கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் என 2 பேரிடமும் மொத்தம் ரூ.5½ லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டார்.

மோசடி- கைது

ஆனால் அவர்கள் 2 பேருக்கும் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் மோசடி செய்து விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட ஸ்ரீராம், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் புகார் மனு அளித்தார். மனுவை பெற்ற அவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி கலைச்செழியன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து கலைச்செழியனை போலீசார் கைது செய்து, விருத்தாசலம் 2-வது குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story