நிதி நிறுவனம் நடத்தி மோசடி; தம்பதி கைது


நிதி நிறுவனம் நடத்தி மோசடி; தம்பதி கைது
x

நெல்லையில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை பெருமாள்புரம் காமராஜர் சாலையில் ரகுநாத் என்ற சுரேஷ், சுரேஷ், முருகானந்தம், வடிவேலு, ஆனந்தராஜ், ஆஷிகா ஆகியோர் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை ரூ.10 ஆயிரம் வீதம் 10 மாதங்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து உள்ளனர். மேலும் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்தை வணிகத்தில் பயன்படுத்தி அதிக லாபம் பெற்றுத்தருவதாகவும் கூறி ஏராளமானோரிடம் பணம் பெற்று, பணத்தை திருப்பி கொடுக்கவில்லையாம்.

இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த ஆல்வின் பிரபு என்பவர் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த மோசடி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரகுநாத் என்ற சுரேஷ் மற்றும் இவருடைய மனைவி ஆஷிகா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் தங்களது அசல் ஆவணங்களுடன் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் ராஜராஜேசுவரி நகர் 3-வது எண்ணில் உள்ள நெல்லை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேரில் வந்து புகார் அளிக்கலாம். மேலும் 0462-2554300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் நெல்லை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Next Story