பள்ளி ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3½ லட்சத்தை எடுத்து மோசடி


பள்ளி ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3½ லட்சத்தை எடுத்து மோசடி
x

பள்ளி ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3½ லட்சத்தை எடுத்து மோசடி நடந்துள்ளது.

கரூர்

கரூர்,

பள்ளி ஆசிரியர்

கரூர் மாவட்டம், குளித்தலை காவேரிநகர் என்.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் கலைமணி (வயது 52). இவர் தாலியாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி கலைமணியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது அதில் பேசிய நபர் வங்கி மேலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு உள்ளார்.

பின்னர் அந்தநபர் கலைமணியிடம் உங்களது பான்கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைக்க வேண்டும் என்று விபரங்களை கேட்டுள்ளார். அப்போது தகவல்களை தர மறுத்த கலைமணி அவசரமாக பால் வாங்கி வர செல்வதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

ஓ.டி.பி. எண்

அந்த நேரத்தில் கலைமணியின் மகள் அக்‌ஷயா அந்த செல்போனை பயன்படுத்தினார். அப்போது செல்போனில் குறுஞ்செய்தியில் வந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அதன் மூலம் ஓ.டி.பி. எண்ணை சமர்ப்பித்து வங்கி விபரங்களை அளித்ததாக தெரிகிறது.இதனையடுத்து ஏப்ரல் 15-ந்தேதி எல்.ஐ.சி. பிரீமிய தொகை செலுத்துவதற்காக வங்கி கணக்கில் உள்ள இருப்பு தொகையை கலைமணி சரிபார்த்து உள்ளார். அப்போது இண்டர்நெட் பேங்கிங் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து 2 முறை மொத்தம் ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 900-ஐ எடுத்துள்ளதாக குறுஞ்செய்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

விசாரணை

இதுகுறித்து கலைமணி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப்பதிவு செய்து, இணையதளம் மூலம் கலைமணி வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 900-ஐ எடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story