கல்வித்துறை அதிகாரி பெயரில் மோசடி


கல்வித்துறை அதிகாரி பெயரில் மோசடி
x

கல்வித்துறை அதிகாரி பெயரில் ேமாசடி செய்த, வடமாநிலத்தை சோ்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

புதுடெல்லியை சேர்ந்தவர்கள் ரோகித்ராய் (வயது 22), கமல்ராய் (22), மெகந்தர் ராய் (30), அஜய்ராய் (23), மேக்ராய் (60). இவர்கள் ஊர், ஊராக சென்று மேஜிக் தொடர்பான புத்தகங்களை விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி திண்டுக்கல் வந்த 5 பேரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீனிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் மேஜிக் செய்து காண்பித்து புத்தகங்களை விற்க அனுமதி கேட்டனர். ஆனால் முதன்மை கல்வி அலுவலர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் இருந்த முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்தை 5 பேரும் செல்போனில் 'ஸ்கேன்' செய்தனர். பின்னர் அதனை பயன்படுத்தி அரசு பள்ளிகளில் மேஜிக் செய்து புத்தகங்களை விற்க முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தது போல் போலியாக கையெழுத்திட்டு சுற்றறிக்கை தயாரித்தனர். பின்னர் அந்த சுற்றறிக்கையை பயன்படுத்தி ஆத்தூர் அரசு பள்ளியில் மேஜிக் நிகழ்ச்சி நடத்தினர். அப்போது அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பள்ளி ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அப்போது வடமாநிலத்தவர்களுக்கு எந்த அனுமதியும் அவர் கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே மோசடி குறித்து திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்தில் முதன்மை கல்வி அலுவலர் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த ரோகித்ராய் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.


Next Story