ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
பழனி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
பழனி தாலுகா தாழையூத்து, சித்திரகுளம், பெரியமொட்டனூத்து, பெத்தநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளுடன் நேற்று திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஏலச்சீட்டு நடத்தி ஒருவர் தங்களை மோசடி செய்து விட்டதாக கூறி புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "தாழையூத்து பகுதியில் ஒருவர் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என 3 வகைகளாக ஏலச்சீட்டு நடத்தினார். மேலும் சீட்டு எடுப்பவர்களிடம் ரூ.1 லட்சத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் கமிஷன் பிடித்து கொண்டு மீதி தொகையை வழங்குவார். எனினும் பல ஆண்டுகளாக அவர் சீட்டு நடத்தியதால் நம்பிக்கையின் பேரில் பலரும் ஏலச்சீட்டில் சேர்ந்தோம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சீட்டு முடிந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அந்த வகையில் ரூ.1 கோடி வரை மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக நாங்கள் கேட்டால், பல்வேறு காரணங்களை கூறி நாட்களை கடத்தி வருகிறார். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்" என்றனர்.