நூல் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.54 லட்சம் மோசடி; டெல்லியில் பதுங்கிய வியாபாரி கைது


நூல் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.54 லட்சம் மோசடி;  டெல்லியில் பதுங்கிய வியாபாரி கைது
x

சின்னாளப்பட்டியில் நூல் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்துவிட்டு, டெல்லியில் பதுங்கிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டியில் நூல் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்துவிட்டு, டெல்லியில் பதுங்கிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

நூல் வியாபாரம்

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர் துணி மற்றும் நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த நூல் வியாபாரியான ராஜா (வயது 48) என்பவர் தொழில் தொடர்பாக அறிமுகம் ஆனார்.

அப்போது அவர் தனக்கு நூல் வியாபாரிகள் பலரை தெரியும் என்றும், அதன்மூலம் குறைந்த விலைக்கு தரமான நூல் வாங்கி தருவதாகவும் கூறியிருக்கிறார். அதோடு அவர் நடத்தி வரும் நூல் விற்பனை நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நூல் வாங்குவதற்கும், நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதற்கும் ராஜலட்சுமியிடம் ராஜா பணம் கேட்டுள்ளார்.

ரூ.54 லட்சம் மோசடி

இதை உண்மை என நம்பிய ராஜலட்சுமி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு தவணைகளில் ரூ.54 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் ராஜா கூறியபடி நூல் வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு ராஜாவின் நிறுவனத்தில் ராஜலட்சுமியை பங்குதாரராகவும் சேர்க்கவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராஜலட்சுமி, கொடுத்த பணத்தை ராஜாவிடம் திரும்ப கேட்டார். அப்போது அவர் பணத்தை கொடுக்காமல் மாயமாகிவிட்டார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ராஜலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ராஜா டெல்லிக்கு சென்று பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டெல்லி சென்று அங்கு பதுங்கியிருந்த ராஜாவை கைது செய்தனர்.


Next Story