பகுதி நேர வேலை தருவதாக கல்லூரி மாணவரிடம் பணமோசடி


பகுதி நேர வேலை தருவதாக கல்லூரி மாணவரிடம் பணமோசடி
x

ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை தருவதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை தருவதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பகுதி நேர வேலை

ராமநாதபுரம் அருகே உள்ள வட்டான்வலசை பகுதியை சேர்ந்த பாண்டி மகன் சதீஷ் (வயது 20). இவர் சிவகங்கை அரசு கல்லூரியில் படித்து வருகிறார். இவரின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை மூலம் தினமும் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று வந்த குறுஞ்செய்தினை பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பிய நிலையில் பகுதி நேர வேலை மூலம் பணம் சம்பாதிக்க சில விதிமுறைகளை தெரிவித்துள்ளனர். அதனை ஒப்புக்கொண்ட சதீஷ் அவர்கள் வழங்கிய கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து பணம் செலுத்தியபோது பணம் இரட்டிப்பாக வந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் வழங்கிய அடுத்தடுத்த போட்டியை பணம் செலுத்தி சென்று வென்றபோது பணம் வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கொடுத்த பணியை பணம் செலுத்தி செய்த நிலையில் அதற்கான தொகை வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சதீஷ் இது நல்ல வழியாக உள்ளதே என நம்பி தொடர்ந்து பணியை செய்வதற்காக முன்பணமாக பலதவணைகளில் பணம் செலுத்தி உள்ளார். அவர் செய்த பணிக்கான தொகை வழங்கப்பட்ட நிலையில் அதனை அவரின் வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை. வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றபோது அடுத்த நிலைக்கு பணம் கட்டி சென்றால்தான் பணத்தை பெற முடியும் என்று கூறியுள்ளது. இதனால் தனது பணத்தை எப்படியாவது பெற வேண்டுமே என்று பணத்தை கடன் வாங்கி செலுத்தி வந்துள்ளார்.

போலீசில் புகார்

ஆனால், அவரின் பணத்தினை பெற முடியாமல் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த சதீஷ் இணையதளத்தில் அவர்களின் விவரங்களை சரிபார்த்தபோது அவை போலியான நபர்கள் என்பதும், இதுபோன்று மோசடியில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் என்பதும் தெரிந்தது.

இதன் பின்னர் சதீஷ், இதுவரை ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 259 கொடுத்து ஏமாந்துள்ளது குறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story