3 மாணவிகளிடம் பண மோசடி


3 மாணவிகளிடம் பண மோசடி
x

நர்சிங் படிக்க இடம் வாங்கித் தருவதாக கூறி 3 மாணவிகளிடம் பண மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்

மன்னார்குடியை சேர்ந்த ஜெனிபர், பரிதாபேகம், ரூபித்ரா ஆகிய 3 பேரும் பிளஸ்-2 முடித்துள்ளனர். தோழிகளான இவர்கள் மூவரும் பி.எஸ்சி நர்சிங் படிக்க திட்டமிட்டனர். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி கும்பகோணத்தில் இயங்கும் தனியார் டிரஸ்ட் ஒன்றின் விசிட்டிங் கார்டு கிடைத்துள்ளது. அதில் இலவசமாக உயர்கல்வியை கற்க விரும்பும் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த செல்போன் எண்ணை 3 மாணவிகளும் தொடர்பு கொண்டு தாங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு நர்சிங் படிக்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

பண மோசடி

அதற்கு டிரஸ்டின் உரிமையாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட மாரியப்பன் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் 3 மாணவிகளுக்கும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் இலவசமாக பி.எஸ்சி நர்சிங் படிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியதோடு அவர்களது 10 மற்றும் 12-ம் வகுப்பு ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்ட அவர்கள் நடைமுறை செலவு என கூறி ஒவ்வொரு மாணவிக்கும் தலா ரூ.7 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.22 ஆயிரத்து 500 பெற்றுக்கொண்டு கல்லூரியில் இடம் வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

2 பேர் கைது

ஒரு கட்டத்தில், தங்களது மகள்களின் அசல் சான்றிதழ்களை தருமாறு அவர்களிடம் பெற்றோர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அசல் சான்றிதழ்களை பெற வேண்டுமானால் ஒவ்வொருவரும் தலா ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் கொடுக்க முடியும் என மிரட்டி உள்ளனர். இதுகுறித்து ஜெனிபரின் தாய் தங்கமணி மன்னார்குடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட கும்பகோணம் தனியார் டிரஸ்ட் உரிமையாளர் மாரியப்பன் (வயது 33), அவரது நண்பர் கார்த்திகேயன் (38) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மாணவிகளின் அசல் சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story