ஆத்தூரை சேர்ந்தவரிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி


ஆத்தூரை சேர்ந்தவரிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி
x

ரூ.10 லட்சம் கடன் தருவதாக கூறி ஆத்தூரை சேர்ந்தவரிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. அந்த பணத்தை போலீசார் மீட்டனர்.

சேலம்

ஆத்தூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). இவரது செல்போன் எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு, தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், ரூ.10 லட்சம் கடன் தருவதாக கூறி ஆதார் எண், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தக விவரம் போன்றவற்றை தெரிவிக்குமாறு கூறியுள்ளார். மேலும், அவர் இன்ஸ்சூரன்ஸ் தொகை ரூ.1 லட்சம் மற்றும் பிராசசிங் தொகை ரூ.40 ஆயிரத்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதை உண்மை என்று நம்பிய முருகேசன், சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கடன் தொகை எதுவும் கொடுக்காமல் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து மோசடி செய்த பணத்தை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்ட முருகேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

அதன்பேரில், போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் பெயரை கூறி மோசடி செய்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை மீட்டு முருகேசனின் வங்கி கணக்கில் திரும்ப ஒப்படைத்தனர். இதுபோன்ற அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், போலியான இணையதள செயலிகள் மற்றும் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக வரும் தகவலை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தெரிவித்துள்ளார்.


Next Story