பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் நூதன மோசடி
பிறந்தநாள் பரிசுப்பொருட்கள் அனுப்பி உள்ளதாக கூறி ராமநாதபுரம் பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிறந்தநாள் பரிசுப்பொருட்கள் அனுப்பி உள்ளதாக கூறி ராமநாதபுரம் பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பரிசு பொருள்
ராமநாதபுரம் அருகே உள்ள நாரணமங்கலம் வேளாங்குளம் பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவரின் மனைவி கவுசல்யா (வயது 30). இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு ஹலோ பிரதர் என்று வந்த குறுஞ்செய்தியை பார்த்த கவுசல்யா தனது கணவர் வெளிநாட்டில் உள்ளதால் அவரின் நண்பர்தான் அனுப்புகிறார் என்று பதில் அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து அழைப்பில் இருந்து வந்த மர்ம நபர் கடந்த 7-ந் தேதி கவுசல்யாவை வாட்ஸ் அப்பில் அழைத்து தனது மகள் எஸ்தர் பிறந்தநாள் என்றும் அதற்கு பரிசாக உங்களுக்கு இந்த அண்ணனின் பிறந்தநாள் பரிசு அனுப்பி வைப்பதாக கூறி முகவரியை பெற்றுள்ளார். முதலில் அதனை நம்பாமல் இருந்து வந்த கவுசல்யா மர்ம நபர் தான் பரிசு பொருட்கள் அனுப்பி வைத்துள்ளதாக ஒரு புகைப்படத்தை அனுப்பி உள்ளார். அதில் விலை உயர்ந்த தங்க நகைகள், ஐபோன், கடிகாரம், கைப்பை என பலவற்றை பார்த்த கவுசல்யா அதனை உண்மை என்று நம்பி உள்ளார்.
ரூ.1¼ லட்சம் மோசடி
கவுசல்யாவை தொடர்பு கொண்ட மர்ம நபர் பரிசு பொருட்களின் மதிப்பு ரூ.51 லட்சம் என்று கூறியுள்ளார். அதன்பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் வெளிநாட்டில் இருந்து இந்த பரிசுப்பொருட்களை அனுப்பி உள்ளதால் அதனை பெறுவதற்கு நடைமுறை கட்டணங்களை செலுத்தினால்தான் பெறமுடியும் என கூறி கவுசல்யாவிடம் பேசி அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.1லட்சத்து 29 ஆயிரத்து 999 பணத்தை பெற்றுள்ளார்.
பின்னர் மர்ம நபரிடம் பரிசுப்பொருட்கள் வேண்டாம் தனது பணத்தை திரும்ப தருமாறு கேட்டபோதுதான் இணைப்பு துண்டிக்கப்பட்டு மோசடி நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றது தெரிந்தது. இதனை தொடர்ந்து தனது கணவரிடம் தான் இவ்வாறு ஏமாந்ததாக தெரிவித்தநிலையில் அவரின் அறிவுரையின்பேரில் கவுசல்யா சைபர்கிரைமில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.