விருத்தாசலம் பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி


விருத்தாசலம் பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி
x

வாட்ஸ்-அப் மூலம் பகுதி நேர வேலை தருவதாக கூறி விருத்தாசலம் பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்த பெண் குறித்து கடலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர்

விருத்தாசலம் தெற்கு வெள்ளூரை சேர்ந்தவர் மகேந்திரவர்மன். இவருடைய மனைவி ரஞ்சனி (வயது 30). இவர் வீட்டில் இருந்த படி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு பகுதி நேர வேலை தருவதாக குறுஞ்செய்தி வந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு ரஞ்சனி பேசினார். அந்த எண்ணில் பேசிய நபர், தன்னுடைய பெயர் பிரியா என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து 20 வேலை தருவதாகவும், அதை முடித்தால், அதற்கான பணத்தை அனுப்புவதாகவும் கூறியுள்ளார். அதன்படி அதற்கான பணத்தையும் அனுப்பி உள்ளார். அதன்பிறகு பணம் கட்டி வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மோசடி

அதன்படி 3 தவணைகளில் ரஞ்சனி ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் கட்டி உள்ளார். ஆனால் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு அவர் மோசடி செய்து விட்டார். இது பற்றி ரஞ்சனி தேசிய சைபர் கிரைம் பதிவு மையத்தில் புகார் செய்தார். அந்த ஆணையம் புகாரை கடலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்பேரில் கடலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் இந்த மாதம் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி காட்டுமன்னார்கோவில் கபிலன், குறிஞ்சிப்பாடி இளவரசன், பண்ருட்டி சிவக்குமார், சிதம்பரம் கார்த்திக் ஜெயராஜ் ஆகியோரும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இது பற்றியும் கடலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆகவே படித்து விட்டு வேலை தேடும் நபர்கள், ஆன்லைனில் வரும் லிங்கை பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மூலம் வரும் போலியான லிங்கையும் தொட வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story