வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் வேலை
திருச்சி குண்டூர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது 30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல எண்ணி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெரிய செட்டிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்த வினோத் கண்ணன் (32) என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக போலி வெப்சைட்டில் தகவல் வெளியிட்டார்.
இதனிடையே வேலை கேட்டு விண்ணப்பித்த கர்ணனனை தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வேலை உள்ளதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய கர்ணன் ரூ.2 லட்சத்தை வினோத் கண்ணன் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் அடுத்த நாள் வினோத் கண்ணனை தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன் பின் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.
ஈரோட்டில் கைது
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கர்ணன் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வினோத் கண்ணன் அனுப்பிய இ-மெயில் முகவரி மூலம் கண்காணித்தனர். இதில் நேற்று வினோத் கண்ணன் அவரது வீட்டில் இருப்பதாக தகவல் தெரியவந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் ஈரோட்டுக்கு சென்று வினோத் கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரது வங்கி கணக்கை சோதனை செய்த போது அதில் ரூ.15 லட்சம் வரை உள்ளது தெரியவந்தது. மேலும் அவரிடம் பணம் செலுத்தி பலர் ஏமாந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. கைதான வினோத் கண்ணன் கேட்டரிங் முடித்துள்ளார். கம்ப்யூட்டர் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.