முதியவரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி
வீட்டுமனை வழங்காமல் முதியவரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திருவாசக தெருவை சேர்ந்தவர் வேலு (வயது 65). இவர் விழுப்புரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் தங்கவேல் என்பவரிடம் இருந்து 5 வீட்டுமனைகளை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்துள்ளார். இவ்வாறாக 30.11.2019 வரை ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 875 கட்டியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட தங்கவேல், வேலுவுக்கு வீட்டுமனை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அவர் பலமுறை தங்கவேலிடம் சென்று வீட்டுமனையோ அல்லது தான் கொடுத்த பணத்தையோ திருப்பித்தருமாறும் வற்புறுத்தி கேட்டுள்ளார். ஆனால் வேலுவுக்கு தங்கவேல் பணம் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
இதுகுறித்து வேலு, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தங்கவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.