முதியவரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
எல்.ஐ.சி. நிறுவனத்தில் இருந்து பேசுவதாககூறி முதியவரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி டெல்லியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியை சேர்ந்தவர் கருணாநிதி(வயது 61). சம்பவத்தன்று இவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர், தான் எல்.ஐ.சி. நிறுவனத்திலிருந்து அதிகாரி பேசுவதாகவும், தங்களுக்கு எல்.ஐ.சி.யில் இருந்து ரூ.47,000 வந்திருப்பதாகவும், அதை தங்களுக்கு அனுப்புவதற்கு, தங்களின் ஏ.டி.எம். கார்டின் நம்பர் மற்றும் சி.வி.வி. எண் பெற்று, பின்னர் ஓ.டி.பி. கூற வேண்டும் எனக்கூறி பல முறை ஓ.டி.பி. பெற்று பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.2,25,000 எடுத்துக்கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் குற்றவாளியை கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் சிவநேசன் மற்றும் போலீசார் அடங்கிய 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு டெல்லி மங்கோல்புரி சென்று, குற்றவாளியான சோனுவை(27) கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு செல்போன், 2 கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.