மெக்கானிக்கல் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடி


மெக்கானிக்கல் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடி
x

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி மெக்கானிக்கல் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியை சேர்ந்தவர் ஜோதிகுமார் (வயது 52). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15-ந் தேதி லிங்கடின் என்ற இணையதளத்தை பயன்படுத்தினார்.

அப்போது பகுதி நேர வேலைக்கு ரூ.1,750-ல் இருந்து ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தினால் வேலை கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த லிங்கில் இருந்த வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டபோது அதன் மூலம் கிடைக்கப்பெற்ற ஒரு லிங்கிற்குள் சென்றதும் டெலிகிராம் குழுவிற்கு இணைப்பு கொடுக்கப்பட்டு அதிலிருந்து ஜோதிகுமாரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அந்த நபர் கூறியவாறு, பயனர் குறியீடு பாஸ்வேர்டு எண்ணை ஜோதிகுமார் பதிவு செய்தார்.

ரூ.3 லட்சம் மோசடி

பின்னர் அவரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அந்த நபர் கூறினார்.

இதனை நம்பிய ஜோதிகுமார், கடந்த 16-ந்தேதியன்று ரூ.15 ஆயிரத்தை 3 தவணைகளாக முதலீடு செய்தார். இதன் மூலம் அவருக்கு ரூ.17,600 திரும்ப கிடைக்கப்பட்டது. அதன் பின்னர் அன்று முதல் 19-ந் தேதி வரை தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 23 ஆயிரமும், தனது மனைவியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.3 லட்சத்து 13 ஆயிரத்தை ஜோதிகுமார் அனுப்பினார். ஆனால் பணத்தை பெற்ற மர்ம நபர்கள், ஜோதிகுமாருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை லாபத்துடன் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

இதுகுறித்து ஜோதிகுமார், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story