பெண்ணிடம் நூதன முறையில் ரூ.3¾ லட்சம் மோசடி
பெண்ணாடம் பெண்ணிடம் பரிசு விழுந்துள்ளதாக கூறி நூதன முறையில் ரூ.3¾ லட்சத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கடலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம் பெண்ணிடம் பரிசு விழுந்துள்ளதாக கூறி நூதன முறையில் ரூ.3¾ லட்சத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கடலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரிசு கூப்பன்
பெண்ணாடத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி சுதா (வயது 36). இவருக்கு கடந்த 27.9.2022 அன்று செல்போன் செயலி மூலம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் பரிசு விழுந்துள்ளதாக தபால் மூலம் கூப்பன் வந்தது. இதை உண்மை என்று நம்பிய சுதா, அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பிரேம்குமார் மற்றும் சுனில்குமார் என்று தங்களை 2 பேர் அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் கூப்பனில் உள்ள பரிசுத்தொகையை பெறுவதற்கு வரி மற்றும் ரிசர்வ் வங்கியில் என்.ஓ.சி. சான்றிதழ் பெற வேண்டும் என்றும், அதற்குண்டான தொகையை தாங்கள் கொடுக்கும் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
மோசடி
அதன்பேரில் அவர்கள் கூறிய வங்கிக்கணக்கில் சுதா 27.9.2022 முதல் 27.1.2023 வரை பல தவணைகளாக மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 100 ரூபாயை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அனுப்பி உள்ளார். அதன் பிறகும் செல்போனில் பேசிய நபர்கள், கூடுதலாக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அப்போது தான் அவர்கள் 2 பேரும் தன்னிடம் பணத்தை மோசடி செய்ததை அறிந்தார்.
இதனால் பாதிக்கப்பட்ட சுதா, இது பற்றி ஆன்லைன் மூலம் புகார் செய்தார். அதன்பேரில் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற ஆன்லைனின் வரும் செயலிகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். ஆன் லைன் மூலம் பரிசு விழுந்துள்ளதாக கூறியும், குறைந்த பணம் முதலீடு செய்தால், அதிக பணம் கிடைக்கும் என்பது போன்ற அறிவிப்புகளை ஏமாற வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.