வங்கியில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் எனக்கூறி தென்காசி ஆசிரியரிடம் ரூ.32½ லட்சம் மோசடி-2 பேர் கைது


வங்கியில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் எனக்கூறி தென்காசி ஆசிரியரிடம் ரூ.32½ லட்சம் மோசடி-2 பேர் கைது
x

வங்கியில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் எனக்கூறி தென்காசியை சேர்ந்த ஆசிரியரிடம் ரூ.32½ லட்சம் மோசடி செய்ததாக 2 பேரை கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

சேலம்

ஆசிரியர்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மாரிராஜன் (வயது 57). இவர், சுரண்டையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது நண்பர்கள் வெங்கடேசன், கந்தசாமி. இவர்கள் மூலம் சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த கர்ணன் (49), தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சஞ்சய்புரத்தை சேர்ந்த சீனிவாசன் (38) ஆகியோர் வங்கி அதிகாரிகள் என்று மாரிராஜனுக்கு அறிமுகம் ஆனார்கள். பின்னர் அவர்கள் ஓமலூரில் எஸ்.கே.எம். ஸ்மால் வங்கி என்ற பெயரில் வங்கி நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும், வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இதைஉண்மை என்று நம்பிய மாரிராஜன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி கன்னங்குறிச்சியில் உள்ள கர்ணனின் வீட்டிற்கு வந்து அவரிடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார்.

ரூ.32½ லட்சம் மோசடி

அதன்பிறகு மாரிராஜன், தனக்கு தெரிந்த 19 நபர்களிடம் எடுத்துக்கூறி ரூ.32 லட்சத்து 60 ஆயிரத்தை சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியார் வங்கி மூலம் கர்ணன், சீனிவாசன் ஆகியோர் நடத்தி வரும் தனியார் வங்கிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி சரிவர கொடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த மாரிராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமலூர் புளியம்பட்டியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று பார்த்தபோது, அங்கு வங்கி பூட்டி கிடப்பதும், கர்ணன், சீனிவாசன் ஆகியோர் மோசடி செய்துவிட்டதும் தெரியவந்தது.

2 பேர் கைது

இது குறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் மாரிராஜன் புகார் செய்தார். அதன்பேரில், வங்கியில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக கர்ணன், சீனிவாசன் ஆகிய 2 பேர் மீது கன்னங்குறிச்சி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 கார்கள், ஒரு செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டது.


Next Story