துபாயில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி -வாலிபர் கைது


துபாயில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி -வாலிபர் கைது
x

துபாயில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த திருச்சி வாலிபரை சைபர் கிரைம் போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் மாயவேல் (வயது 32). எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பு முடித்துள்ள இவர் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், மாயவேலிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எம்.பி.ஏ. பட்டதாரியான திருச்சி மாவட்டம் ஓலையூர் கிராமத்தை சேர்ந்த செல்வத்தின் மகன் மதன்குமார் என்கிற மரிய ரஞ்சித் (32) என்பவர் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு நண்பராக பழகியுள்ளார்.

ரூ.4 லட்சம் மோசடி

மாயவேலிடம் மரிய ரஞ்சித் துபாய் நாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.4 லட்சத்தை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். ஆனால் மரிய ரஞ்சித் கூறியபடி மாயவேலுக்கு துபாய் நாட்டில் வேலை வாங்கி தரவில்லை. மேலும் அவர் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி மாயவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரிய ரஞ்சித்தை வலைவீசி தேடி வந்தனர்.

சென்னையில் கைது

இந்தநிலையில் சென்னை கொட்டிவாக்கத்தில் பதுங்கியிருந்த மரிய ரஞ்சித்தை நேற்று முன்தினம் கைது செய்த சைபர் கிரைம் போலீசார் நேற்று பெரம்பலூருக்கு அழைத்து சென்றனர். மரிய ரஞ்சித்திடம் இருந்து ரூ.4 லட்சம், 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story