"வீட்டிலிருந்தே அதிகம் சம்பாதிக்கலாம்" என ஏமாற்றி என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி
வீட்டிலிருந்தே அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி ராமநாதபுரம் என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டிலிருந்தே அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி ராமநாதபுரம் என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் மோகனகண்ணன் (வயது 32). இவர் என்ஜினீயரிங் படித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா காலம் முதல் வீட்டில் இருந்து பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் செல்போன் எண்ணிற்கு தினமும் வீட்டில் இருந்தபடியே ரூ.8 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லாபம் சம்பாதிக்கலாம் என்ற குறுந்தகவல் வந்துள்ளது.
இந்த தகவலை கண்ட மோகனகண்ணன், இந்த முறையில் சம்பாதிக்கலாம் என்று ஆசைபட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் அளித்த இணைப்பினை பின்தொடர்ந்து டெலிகிராம் செயலிக்குள் சென்று அவர்கள் சொல்வது போல் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கி உள்ளார். இதற்காக அவரின் கணக்கில் ரூ.285 மற்றும் ரூ.2,547 லாபமாக கிடைத்துள்ளது. வீட்டில் இருந்தபடியே இது நல்ல வேலையாக உள்ளதே என முடிவு செய்த மோகன கண்ணன் அதிக பொருட்களை வாங்கினால் அதில் அதிக லாபம் கிடைக்கும் என கருதினார்.
போலீசில் புகார்
இதன்படி பொருட்களை வாங்க ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 280-ஐ செலுத்தினார். இந்த தொகைக்கான லாப தொகையை தனது கணக்கில் இருந்து எடுக்க முயன்றபோது முடியாமல் போகவே மோகனகண்ணன் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் தெரிவித்த செல்போன் எண்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதையடுத்து அவர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.