வாலிபரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி


வாலிபரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி
x

வள்ளியூரில் செல்போன் செயலி மூலம் கடன் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.40 ஆயிரத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

திருநெல்வேலி

வள்ளியூரில் செல்போன் செயலி மூலம் கடன் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.40 ஆயிரத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடன் தருவதாக மோசடி

ஆண்ட்ராய்டு நவீன செல்போன்கள் வந்த பிறகு அதில் பல்வேறு பயன்பாட்டுக்காக எண்ணற்ற செயலிகள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. இவை பயனுள்ளதாக இருந்த போதிலும், மோசடி செயல்களுக்கு உடந்தையாகவும் உள்ளன. மோசடி செல்போன் செயலியால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடன் தருவதாக கூறிய, மோசடி செல்போன் செயலியால் நெல்லை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் ரூ.40 ஆயிரத்தை இழந்துள்ளார். வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபரின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி வந்தது. அவர் அதை திறந்து பார்ப்பதற்காக கிளிக் செய்ததும், ஒரு செயலிக்கு இணைப்பு சென்றது. அதில், உங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதை பெறுவதற்கு முன்பணமாக ரூ.40 ஆயிரம் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரூ.40 ஆயிரம் மோசடி

இதனை உண்மை என்று நம்பிய வாலிபர், அங்கு குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்கிற்கு ரூ.40 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். பின்னர் அவருக்கு கடன் தொகை எதுவும் கிடைக்கவில்லை. அந்த செல்போன் எண்ணின் சேவையும் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்து, நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வடமாநில வாலிபர்கள் நூதன முறையில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. மேலும் மோசடி கும்பலின் வங்கி கணக்கை முடக்கி வைத்து, அதன் மூலம் பணத்தை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


Next Story