பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து கப்பல் மூலம் சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.42¼ லட்சம் மோசடி
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து கப்பல் மூலம் சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.42¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுண்ணாம்புக்கல்
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பூவிழி (வயது 40). பட்டதாரியான இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில், நான் துபாய் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து சுண்ணாம்புக்கல்லை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்து வருகிறேன்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜனா என்பவர், என்னை தொடர்பு கொண்டு இறக்குமதி சம்பந்தமாக பேசினார். இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுண்ணாம்புக்கல் கொள்முதல் செய்யப்பட்டது. அதனை அந்த நாட்டில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு கொண்டு வருவதற்கு கப்பல் ஏற்பாடு செய்வதுடன் கமிஷன் அடிப்படையில் நிர்ணயம் செய்து கொடுக்குமாறு ஜனாவின் இ-மெயிலுக்கு தகவல் அனுப்பினேன்.
மோசடி
அதன்பேரில் அவர் சில கப்பல் நிறுவனங்களை பரிந்துரை செய்தார். முடிவில் ஒரு கப்பல் நிறுவனம் என்னுடைய மூலப்பொருட்களை ஏற்றி தருவதாக ஒப்பு கொண்டது. இதை இ-மெயில் மூலம் உறுதி செய்தேன். மேலும் அதற்கான ஒப்பந்த பத்திரம் என்னுடைய இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஒப்பந்த்தத்தில் 20 சதவீதம் முன்பணமும், மீதமுள்ள 80 சதவீதம் பணம் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில் முன்பணமாக ரூ.42 லட்சத்து 42 ஆயிரத்து 680-யை என்னுடைய வங்கி கணக்கில் இருந்து அந்த கப்பல் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு செலுத்தினேன். ஆனால் அதன்பிறகு கப்பல் பற்றிய விவரங்களையும், சரக்குகளை எனக்கு காரைக்காலில் இறக்குமதி செய்யும் விவரங்களையும் தெரிவிக்கவிலை. எனவே இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
வழக்குப்பதிவு
இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் பெண்ணிடம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.