வீடு கட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி:பெரியகுளம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
துபாயில் பணியாற்றி வந்த பெண்ணிடம் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.43 லட்சம் மோசடி செய்த பெரியகுளம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
துபாய் நிறுவன அதிகாரி
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போடி மெட்டு பகுதியை சேர்ந்த ராகுல்ஜேக்கப் மனைவி ராஜிமேத்யூ (வயது 45). இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் 2012-ம் ஆண்டு துபாயில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தேன். அப்போது போடி மெட்டில் சொந்த வீடு கட்டுவதற்கு முயற்சி செய்தேன். இதற்காக பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த முகமது என்பவர் என்னை தொடர்பு கொண்டார். தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், வீடு கட்டி கொடுப்பதாகவும் கூறினார்.
அதனை நம்பி அவருக்கு முதலில் ரூ.10 லட்சம் அனுப்பினேன். அதற்கான கட்டுமான பணிகளை செய்து விட்டு புகைப்படங்களை எனக்கு அனுப்பினார். பின்னர் மேலும் ரூ.35 லட்சத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் மேற்கொண்டு கட்டுமான பணிகள் எதையும் செய்யவில்லை. பின்னர் நான் பெரியகுளத்திற்கு சென்று முகமதுவிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.
பஞ்சமி நிலம்
அப்போது அவர் பணம் செலவாகி விட்டதாகவும், பணத்திற்கு பதில் எண்டப்புளியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை கொடுப்பதாகவும் கூறினார். அந்த நிலத்தை பத்திரம் முடிக்க ஆவண செலவு ரூ.8 லட்சம் கேட்டார். அதை கொடுத்த பிறகு அந்த நிலத்தை எனக்கு விற்பனை செய்தார். ஆனால் அந்த இடம் பஞ்சமி நிலம் என்று எனக்கு தெரியவந்தது. அவரிடம் இது குறித்து கேட்ட போது தேனியில் உள்ள வேறு ஒரு வீட்டுமனையை கொடுப்பதாக கூறினார். ஆனால் அந்த நிலத்தின் பெயரிலும் பல வங்கிகளில் அவர் கடன்பெற்று இருப்பதாக தெரியவந்தது.
இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, முகமது மற்றும் அவருடைய நண்பர் வடகரையைச் சேர்ந்த பிரபாகரன் ஆகிய இருவரும் ஏற்கனவே எனக்கு கொடுத்த பஞ்சமி நிலத்தை அரண்மனைப்புதூர் வசந்தம் நகரைச் சேர்ந்த மரக்காமலையிடம் விற்பனை செய்து பணம் கொடுப்பதாக கூறினர். அதனை நம்பி அதற்கான விற்பனை ஆவணங்களில் கையொப்பமிட்டு கொடுத்தேன். அதற்கு மரக்காமலை ரூ.5 லட்சத்திற்கான காசோலை மட்டும் கொடுத்தார். அந்த காசோலைக்கு வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
3 பேர் கைது
இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த மோசடி குறித்து முகமது, பிரபாகரன், மரக்காமலை ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.