போலி பட்டா கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி
போலி பட்டா கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிபட்டு பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 34). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இடம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். அவர் சந்தைக்கோடியூர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. தாசில்தார் மற்றும் கலெக்டரிடம் பேசி பட்டா வாங்கி கொடுக்கிறேன் என்று கூறி 2019-ம் ஆண்டு ரூ.2½ லட்சம் வாங்கிக்கொண்டு 2 சென்ட் இடத்திற்கு தசரதனின் தாயார் பெயரில் பட்டா கொடுத்துள்ளார். மீண்டும் 6 மாதம் கழித்து இன்னொரு இடத்திற்கு பட்டா கொடுப்பதாக கூறி மீண்டும் ரூ.2½ லட்சம் வாங்கிக்கொண்டு பட்டா கொடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த தசரதன் திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாரிடம் பட்டாவை காட்டி கேட்டபோது இது போலி பட்டா என்று கூறியுள்ளார். இது குறித்து அந்த நபரிடம் தசரதன் கேட்டதற்கு தவறு நடந்துள்ளது. பணத்தை கொடுத்து விடுகிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் பல மாதங்களாக பணத்தை கொடுக்கவில்லை. பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காதர் கான் விசாரணை நடத்தி வருகிறார்.