போலி நகை கொடுத்து ரூ.5¾ லட்சம் மோசடி
பெண்ணாடத்தில் போலி நகை கொடுத்து ரூ.5¾ லட்சம் மோசடி செய்த தி.மு.க. கிளை செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வடக்கு ராதா வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). பெண்ணாடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் பெண்ணாடம் தேரடியில் நகை பழுதுநீக்கும் கடையும் நடத்தி வருகிறார். இந்த கடைக்கு சவுந்தரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவரும், தி.மு.க.கிளை செயலாளருமான பாலகிருஷ்ணன் (44) என்பவர் வந்தார். பின்னர் அவர் 916 ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்பட்ட 41 கிராம் எடை உள்ள ஒரு நகை மற்றும் 51 கிராம் எடையுள்ள ஒரு நகையை ராஜேந்திரனிடம் கொடுத்து அதனை விற்பனை செய்து தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த நகையை வாங்க விரும்பிய ராஜேந்திரன், அதற்காக தனது நண்பர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் அந்த பணத்தை பாலகிருஷ்ணனிடம் கொடுத்து 2 நகையையும் வாங்கினார். தொடர்ந்து அதில் ஒரு நகையை ராஜேந்திரன் உருக்கி பார்த்தபோது, அதில் 4 கிராம் தங்கம் மட்டுமே இருந்தது.
போலீசார் விசாரணை
மீதி செம்பு, வெள்ளி கலந்து இருந்தது தெரிந்தது. பின்னர் 2-வது நகையை சோதனை செய்தபோது, அதுவும் போலியானது என்பது தெரிந்தது. அதன்பின்னரே பாலகிருஷ்ணன், போலியான நகையை கொடுத்து ராஜேந்திரனை மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து ராஜேந்திரன் பெண்ணாடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.