கடன் பெற்று தருவதாகக்கூறி ரூ.51 ஆயிரம் மோசடி
திருப்பத்தூர் அருகே கடன் பெற்று தருவதாகக்கூறி மோசடி செய்யப்பட்ட ரூ.51 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளி கிராமம் கிருஷ்ணாபுரம் வட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம், கடந்த 17-ந் தேதி ஒருவர் பேசினார். அப்போது தனியார் நிறுவனத்தில் லோன்பெற பிரகாஷ் தகுதி பெற்றுள்ளதாகவும், ஏ.டி.எம். எண் மற்றும் ஓ.டி.பி. மண்ணை தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார். அதை நம்பிய பிரகாஷ் தன்னுடைய ஏ.டி.எம். கார்டு எண், மற்றும் ஓ.டி.பி. ஆகியவற்றை எதிரில் பேசிய நபரிடம் கூறியிருக்கிறார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.51,245 எடுக்கப்பட்டுள்ளது. உடனே சுதாரித்து கொண்ட பிரகாஷ் இதுகுறித்து சைபர் கிரைம் 1930-ஐ தொடர்பு கொண்டு பணம் பறிபோனது சம்பந்தமாக புகார் அளித்ததார்.
அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி அவர் இழந்த ரூ.51,245-ஐ மீட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பாதிக்கப்பட்ட நபரிடம் அவர் இழந்த பணத்தை அவருடைய வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணத்தை வழங்கினார்