கொட்டாம்பட்டி அருகே போலி தங்க காசு கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி
கொட்டாம்பட்டி அருகே போலி தங்க காசு கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொட்டாம்பட்டி
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 49). கல்குவாரியில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் ராஜாமுகமது கருங்காலக்குடியில் இருக்கும்போது கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கண்ணன் தன்னிடம் புதையல் எடுத்த தங்க காசுகள் 296 இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அவரிடம் இருந்த 2 தங்க காசுகளை வாங்கி சோதனை செய்து பார்த்ததில் அது தங்கம் என தெரிந்தது. இதை நம்பி ராஜாமுகமது 2 லட்சம் ரூபாயும், கருங்காலக்குடியில் நகை கடை வைத்திருக்கும் நண்பர் முத்தலிபு 5 லட்சம் ரூபாயும் சேர்த்து கண்ணனிடம் கொடுத்து தங்க காசுகளை வாங்கினர்.
பின்னர் வாங்கி வந்த தங்க காசுகளை சோதனை செய்து பார்த்தபோது அது போலி தங்க காசுகள் என தெரிந்ததால் ராஜாமுகமது அதிர்ச்சி அடைந்தார். அவரை போலி தங்க காசு கொடுத்து ஏமாற்றிய நபரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி தங்க காசு கொடுத்து ஏமாற்றிய நபரை தேடி வருகின்றனர்.