முதியவரிடம் ரூ.9 லட்சம் மோசடி
தேனி அருகே முதியவரிடம் ரூ.9 லட்சம் மோசடியில் ஈடுபட்ட உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பழனிசெட்டிபட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 67). இவரும், வடக்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவரும் உறவினர்கள். செந்தில்குமார் வீடுகளில் உள்அலங்காரம் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். தொழில் அபிவிருத்திக்காக பன்னீர்செல்வத்திடம் அவர் ரூ.9 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் வங்கிக் காசோலை வழங்கினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது செந்தில்குமாரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று தெரியவந்தது. இதுகுறித்து தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று முன்தினம் பழனிசெட்டிபட்டி போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.