ரூ.50 லட்சம் மோசடி; தனியார் நிறுவன உரிமையாளர் கைது


ரூ.50 லட்சம் மோசடி; தனியார் நிறுவன உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைனில் முதலீடு செய்தால்...

குமரி மாவட்டம் வேர்கிளம்பி பூவன்கோடு பிச்சாத்துவிளையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 52). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் பூவன்கோட்டில் இயங்கி வரும் ஒரு கல்வி அறக்கட்டளையில் தலைவராக உள்ளேன். பள்ளியாடி நட்டாலம் பகுதியை சேர்ந்த பெஸ்லி சாமுவேல் (42) என்பவருடன், எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தை தக்கலையில் நடத்தி வருவதாக கூறினார். அந்த நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார்.

ரூ.50 லட்சம் மோசடி

இதை நம்பி நான் அந்த நிறுவனத்தில் 2 தவணைகளாக ரூ.50 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் அவர் கூறியது போல எந்த லாபமும் கிடைக்கவில்லை. நான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். அதற்கு ரூ.25 லட்சத்துக்கு 2 காசோலைகள் கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் கொடுத்த போது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறினர். இதனால் நான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தேன். எனவே மோசடி செய்த பெஸ்லி சாமுவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன உரிமையாளர் கைது

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பெஸ்லி சாமுவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story