ஏமாற்றும் 'ஏ.டி.எம்.' எந்திரங்கள்


‘ஏ.டி.எம்.' எந்திரங்கள் ஏமாற்றுவதால் பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது.

விருதுநகர்

ஒரு நேரத்தில் வசதியானவர்கள் மட்டுமே வங்கிகளில் கணக்கு வைத்திருந்தார்கள். ஒரு கிராமத்தில் ஒன்றோ, இரண்டு பேர் தான் வங்கிகளில் பணம் போடுவது வழக்கம். அப்படிப்போடுகிறவர்கள் மிராசுதார் அல்லது வியாபார பிரமுகர்களாக இருக்கக்கூடும்.

'அவரு பேங்கில் பணம் வைத்திருக்கிறார்' என்று அவர்களை கிராமங்களில் பெருமையாகச் சொல்வது உண்டு. சாதாரண மக்களுக்கு வங்கி வாசல்கள்கூட தெரியாமல் இருந்தது.

காலம் மாறியது

இப்போது காலம் மாறிவிட்டது. கடன், சேமிப்பு, அரசு உதவித்தொகை, ஓய்வூதியம் என்று பெரும்பாலான பணிகளுக்கு மக்கள் வங்கிகளின் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து விட்டார்கள். அதேநேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியாக வங்கிச்சேவை கிடைக்கிறதா? என்று கேட்டால், இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியது இருக்கும்.

ஒரு தனியார் வங்கியில் வாடிக்கையாளரிடம் காட்டுகின்ற கனிவு, வேலையில் துரிதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கிடைப்பது இல்லை. உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, அதை எடுக்க வரிசையில் கால்கடுக்க நிற்க வேண்டும்.

'ஏ.டி.எம்.' என்கிற தானியங்கி எந்திரம் அறிமுகமான பிறகு அந்த நிலை மாறி வந்தது. இருந்தாலும் அதன் சேவைகளிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகள் குறித்தும் வங்கிகளின் சேவைகள் குறித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

தொடர் விடுமுறை

ஓய்வு பெற்ற வங்கி அலுவலர் மாரிக்கனி:-

கடந்த காலங்களில் வங்கிகளுக்கு சென்று நேரடியாக பணம் எடுக்கும் நிலை இருந்து வந்த நிலையில் ஏ.டி.எம். மையங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்பு பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் பணத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலையில் பொதுமக்கள் தங்கள் பண தேவைக்கு ஏ.டி.எம். மையங்களை தான் நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

வங்கி நிர்வாகத்தினரும் முன்னெச்சரிக்கையாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் எதிர்பார்க்கும் அளவிற்கு மேலாக பணம் எடுக்கப்படுவதால் ஏ.டி.எம். மையங்களில் பணம் காலியாகும் நிலை உள்ளது. குறிப்பிட்ட அரசு வங்கிகளில் வங்கி ஊழியர்களே மையங்களில் பணத்தை நிரப்புகின்றனர். அதன் கொள்ளளவுக்கு பணத்தை நிரப்பி விடுகின்றனர். தொடர் விடுமுறை நாட்களில் அவர்கள் வேலைக்கு வருவதில்லை. வேறு சில வங்கிகளில் மையங்களில் பணம் வைக்கும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் பணம் காலியானவுடன் மீண்டும் பணத்தை நிரப்புவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் நடைமுறை பிரச்சினைகளால் இதனை உடனடியாக செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம் தவிர்க்கப்பட வேண்டும்.

மீண்டும் டெபாசிட்

அரசு வங்கி முதுநிலை மேலாளர்:- ஏ.டி.எம். மையங்களில் தொடர் விடுமுறை நாட்களில் வங்கி நிர்வாகம் பணத்தை தேவையான அளவிற்கு நிரப்பி வைப்பது வழக்கம் தான். ஆனாலும் விழா காலங்களில் பொதுமக்களுக்கு பணத்தேவை கூடுதலாக இருக்கும்நிலையில் அவர்கள் உடனடியாக ஏ.டி.எம். மையங்களைத்தான் நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே ஏ.டி.எம். மையங்களிலும் பணம் காலியாகி விடுகிறது. இது தவிர்க்க முடியாத நிலை தான். பொதுமக்களும் தொடர் விடுமுறை நாட்கள் வரும் போது அதற்கு முன்பே தங்களுக்கு தேவையான பணத்தை வங்கிகளுக்கு நேரடியாக சென்று எடுத்து வைத்துக் கொள்ளலாம். விழாக்கள் முடிந்த பின்பு மீதமிருக்கும் பணத்தை வங்கியில் கணக்கில் மீண்டும் டெபாசிட் செய்து கொள்ளலாம். இது அவர்களுக்கும் நல்லது. வங்கி நிர்வாகத்தினர் மீது ஏ.டி.எம். மையங்களை பணம் இல்லாமல் காலியாக விடப்பட்டுவிட்டதென புகார் கூறும் நிலை ஏற்படாது.

வக்கீல் விக்னேஷ் பாண்டியன்:-

காரியாபட்டி, நரிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். விவசாயிகள் தங்களுக்கு பணம் தேவைப்படும்போது ஏ.டி.எம். மையத்திற்கு சென்றால் பெரும்பாலும் பணம் இல்லாத நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்கள், தொடர்விடுமுறையில் பணம் இருப்பது கிடையாது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். தொடர்விடுமுறையின் போது வங்கி நிறுவனங்கள் அனைத்து மையங்களிலும் பணம் உள்ளதா? என கண்காணித்து பணத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த குடும்பத்தலைவி சுகன்யாதேவி:-

இன்றைய சூழலில் நம் அன்றாட வாழ்க்கையில் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. பணம் இல்லையென்றால் இந்த உலகில் எந்த பொருளையும் வாங்க முடியாது. பணத்தை பெரும்பாலும் யாரும் கையில் வைத்திருப்பதில்லை. உடனடியாக பணம் தேவைப்பட்டால் ஏ.டி.எம். மையத்திற்கு செல்கிறோம். அவ்வாறு அவசர தேவைக்கு பணம் எடுக்கச்சென்றால் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதில்லை. அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் அரசு விடுமுறை நாட்களில் பணம் எடுக்கவே முடிவதில்லை. இதனால் பணம் இல்லாமல் பல சிரமங்களுக்கு ஆளாகிறோம். நம் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மருத்துவமனை அவசர தேவைக்கு கூட ஏ.டி.எம். மையங்களில் எடுக்க முடிவதில்லை. ஆதலால் தொடர்விடுமுறையின் போது வங்கிகள் தேவையான பணத்தை ஏ.டி.எம். ைமயங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் மற்றவர்களிடம் பணம் வாங்கி விழாக்களை கொண்டாடும் நிலைக்கு தள்ளப்படுகிேறாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.Next Story