பாம்பு கடித்து குழந்தை இறந்த மலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை


பாம்பு கடித்து குழந்தை இறந்த மலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை
x

பாம்பு கடித்து குழந்தை இறந்த மலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.

வேலூர்

ஆம்புலன்ஸ் சேவை

அணைக்கட்டு அடுத்த மலைப்பகுதியில் உள்ள அத்திமரத்துக் கொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி- பிரியா தம்பதியினரின் 1½ வயது குழந்தை தனுஷ்காவை கடந்த மாதம் 26-ந் தேதி பாம்பு கடித்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லேரி மலைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த, வேலூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி அலேரி மலைக்கு தினமும் சென்று வரும் வகையில் ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் தொடக்கவிழா அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர், எம்.எல்.ஏ.

வருவாய் கோட்டாட்சியர் கவிதா, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சி பாஸ்கரன், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் குமாரவேல்பாண்டியன், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.

இந்த ஆம்புலன்ஸ் வாகனம் டிரைவர் மற்றும் ஒரு செவிலியருடன் அல்லேரி மலை மீது நிறுத்தப்படும். அங்கு வசிக்கும் மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள வழிவக செய்யப்படும். இதனால் இனிவரும் காலங்களில் பெரும்பாலான உயிரிழப்புக்கள் தடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.

ரூ.5 கோடியில் தார் சாலை

இதனையடுத்து நெக்னியில் இருந்து குலயம் வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.5 கோடியில் தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை போடப்பட்டது. மேலும் பீஞ்ச மந்தை பலாம்பட்டு மலை கிராமத்தில் ரூ.33 லட்சத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கலந்து கொண்டு 54 பயனாளிகளுக்கு பயிர் கடன் வழங்கி பேசினார்.

பின்னர் பலாம்பட்டு கிராமத்தில் பல் நோக்கு கூட்டுறவு புதிய கிளை மற்றும் பகுதி நேர ரேஷன் கடை கட்டுவதற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அடிக்கல் நாட்டினார். முன்னதாக பேசிய நந்தகுமார் எம்.எல்.ஏ. அணைக்கட்டு தொகுதியை பொறுத்த வரை மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. நமது நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி என்பது எட்டா கனியாக இருந்து வந்தது. தற்போது தமிழக அரசு மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story