போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி


போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய,மாநில அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மத்திய,மாநில அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலவச பயிற்சி

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தற்சமயம் இளநிலை செயலக உதவியாளர், பிரிவு எழுத்தர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

காலிப்பணியிடங்கள்

இந்த காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முறையில், கணினி அடிப்படையிலான தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை ,தயார் செய்யும் விதம், தேர்வுக்கான நூல்கள் மற்றும் பாடக்குறிப்புகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும், மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

பயிற்சி அளிக்க ரூ.800 மதிப்பூதியம்

எஸ்.எஸ்.சி., தேர்வுகளில் அனுபவமிக்க பயிற்றுனர்கள் இந்த அலுவலககத்தில் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க விரும்பும் பட்சத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மதிப்பூதியத்தில் வாய்ப்பு வழங்கப்படும்.எனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், 2-வது குறுக்கு தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-1 என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்திற்கு நேரிலோ அல்லது 9499055904 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தங்கள் விவரங்களை அனுப்பியோ முன்பதிவு செய்துகொள்வதோடு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் நாளன்று நேரில் வந்து கலந்துகொண்டு பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story