பொங்கல் பரிசுப்பொருட்களுடன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக மண்பானை, அடுப்பு; மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை
பொங்கல் பரிசுப்பொருட்களுடன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக மண்பானை, அடுப்பு வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு மாநில தலைவர் சேம.நாராயணன் தலைமை தாங்கினார். பின்னர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் மாவட்ட தலைவராக கார்த்திக், செயலாளராக ஜெகதீசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாநில தலைவர், மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் நடந்த கூட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, வேட்டி-சேலை ஆகியவை அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பொருட்களுடன் மண்பானை, அடுப்பையும் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக களிமண் எடுக்க அரசாணை வெளியிட வேண்டும். மண்பாண்ட தொழிலை மேம்படுத்த மண்பாண்ட தொழிற்பயிற்சி கல்லூரி தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கணபதி, பொருளாளர் மகேசு கண்ணன், இளைஞரணி தலைவர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.