இலவச மின் இணைப்பு வீட்டில் பிரிட்ஜ், வாஷிங்மிஷின் ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்து அதிர்ச்சி அளித்த மின்வாரிய அதிகாரிகள் - சீதன பொருட்கள் என கூறியதால் அபராதம் குறைப்பு
இலவச மின் இணைப்பு வீட்டில் பிரிட்ஜ், வாஷிங்மிஷின் பயன்படுத்தி வருவதாக ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்து மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அளித்தனர் . சீதன பொருட்கள் என கூறியதால் அபராதம் குறைக்கப்பட்டது.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் நெருஞ்சியம்மாள் (வயது 45).கூலித்தொழிலாளி. இவரது கூரை வீட்டில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கொங்கபட்டி பகுதியில் ஆய்வு செய்த மின் மதிப்பீட்டு அலுவலர்கள் நெருஞ்சியம்மாளின் வீட்டையும் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் பயன்படுத்தாமல் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மிஷினை பயன்படுத்தி வருவதாக கூறி ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நெருஞ்சியம்மாள் வீட்டில் இருந்த பொருட்கள் தனது மகளுக்கு சீதனமாக கொடுத்த பொருட்கள். அவற்றை பயன்படுத்தவில்லை என மின் வாரிய அலுவலகத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று மின்வாரிய உதவி பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அபராத தொகையை குறைத்து ரூ.3 ஆயிரம் செலுத்த கூறி இருக்கிறார்கள். இந்த ரூ.3 ஆயிரத்தையும் செலுத்த முடியாத நிலையில் நெருஞ்சியம்மாள் தவித்து வருவதாக கவலையுடன் தெரிவித்தார்.