திருநங்கைகள் உள்பட 30 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா
குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில் திருநங்கைகள் உள்பட 30 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி முகாம் நடந்து வருகிறது. இதில் குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து உதவித்தொகை, பட்டா மாற்றம், குடும்ப அட்டை, பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 458 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நேற்று நடந்த முகாமில் 10 தாலுகா அலுவலகங்களிலும் 1817 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் திருநங்கைகள் உள்பட 30 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவுக்கான ஆணை, 65 பேருக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணை, முழுபுலம் பட்டா மாறுதல் ஆணையை 10 பேருக்கு கலெக்டர் வழங்கினார்.
விழிப்புணர்வு
தொடர்ந்து ஜமாபந்தியில், கடலூர் மாவட்டத்தில் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையிலும், சாராயம், போதை பொருட்களுக்கு எதிராக தகவல் அளிக்க மாவட்ட கலெக்டர் - 9080731320, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு - 7418846100 ஆகிய செல்போன் எண்கள் உள்ளடக்கிய வகையில் ஸ்டிக்கர் மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.