38 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா
38 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா
காங்கயம்
காங்கயத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 38 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
பட்டாவழங்கும் விழா
திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் தலைமையில், திருப்பூர் மாவட்டம், காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 38 பேருக்கு ரூ.15 லட்சத்து 20ஆயிரம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களும் மற்றும் 160 பேருக்கு இ-பட்டாக்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இ-பட்டாக்களை வழங்கினார்.
விரைவில் அடிப்படை வசதிகள்
அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து வீட்டுமனை பட்டா வழங்குதல் போன்ற பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் காங்கயம் தாலுகா, முத்தூர் பகுதிகளுக்குட்பட்ட 7 பேருக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்திலும், வீரசோழபுரம் பகுதிகளுக்கு உட்பட்ட 31 பேருக்கு ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் என மொத்தம் ரூ.15.20 லட்சத்தில் 38 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதில் காடையூர் பகுதிகளுக்குட்பட்ட 65 பேருக்கும், கத்தாங்கண்ணி பகுதிகளுக்குட்பட்ட 25 பேருக்கும், வட்டமலை பகுதிகளுக்கு உட்பட்ட 70 பேருக்கும் கணினி மூலமாக பதிவு செய்யப்பட்ட இ-பட்டா என்கிற முறையில் மொத்தம் 160 பேருக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டாவை பெற்றவர்கள் அங்கே வீடு கட்டி குடியேறிய பட்சத்தில் அடிப்படை வசதிகள் விரைவாக ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆவின் பாலகம்
தொடர்ந்து காங்கயம் பஸ் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஆவின் பாலகத்தை தமிழ்நாடு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.