செல்போனில் வரும் அபராத குறுந்தகவல்கள்


செல்போனில் வரும் அபராத குறுந்தகவல்கள்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 3:00 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் சோதனை செய்யாமலேயே செல்போனில் வரும் அபராத குறுந்தகவல்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடியில் சோதனை செய்யாமலேயே செல்போனில் வரும் அபராத குறுந்தகவல்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சோதனை செய்யாமலேயே...

பரமக்குடியில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பஸ் நிலையம், பெரிய கடை பஜார், சின்னக்கடை பகுதி உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பரமக்குடி நகர் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்..குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் பஸ் நிலையம், ஐந்து முனைப் பகுதி, அரியனேந்தல் நான்கு வழிச்சாலை, எமனேஸ்வரம் ஆகிய பகுதிகளில் போலீசார் நின்று கொண்டு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு முறையான ஆவணங்கள் இருக்கிறதா? இல்லையா? சீட் பெல்ட் அணிந்து இருக்கிறார்களா? ஹெல்மெட் அணிந்து இருக்கிறார்களா? வண்டிக்கான உரிய ஆவணங்கள் உள்ளதா? என வாகன ஓட்டுநர்களிடம் எதுவும் கேட்காமல் வாகனங்களின் நம்பரை தாங்கள் வைத்திருக்கும் எந்திரத்தில் பதிவு செய்து ரூ.500, ரூ.1000, ரூ.2000 என அபராதம் விதிக்கின்றனர்.

குறுந்தகவல்களால் அதிர்ச்சி

அபராதம் விதிக்கப்பட்டதும் வாகன ஓட்டுநர்களின் செல்போனுக்கு போலீசார் விதிக்கப்பட்டுள்ள அபராதம் குறித்த குறுந்தகவல்கள் வருகிறது. இதை பார்த்ததும் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். வானங்களை நிறுத்தி சோதனை செய்யாமலே இது போன்ற அபராதம் விதிப்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

மேலும் ஏராளமான வாகன ஓட்டுனர்களுக்கு அனைத்து ஆவணங்களும் சரியாக வைக்கப்பட்டிருந்தும் அவர்களுக்கும் இதுபோன்ற அபராதங்கள் செல்போனில் குறுந்தகவல்களாக வருகிறது. இது குறித்து காவல்துறையினரிடமும், போக்குவரத்து போலீசாரிடமும் கேட்டால் நாங்கள் என்ன செய்வது? மாதத்திற்கு இவ்வளவு ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என மேல் அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர் என கூறுகின்றனர்.

வாக்குவாதம்

சில வாகன ஓட்டுனர்களுக்கு இதுபோன்று அபராதங்கள் தொடர்ந்து விதிக்கப்பட்டு அதற்கான குறுந்தகவல்கள் வந்துள்ளது என கூறுகின்றனர். போலீசாரின் இச்செயலால் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்கின்றனர். எனவே காவல்துறையினர் வாகன ஓட்டுநர்களை முறையாக நிறுத்தி அவர்களிடம் ஆவணங்கள் இருக்கிறதா? என சரி பார்த்து ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராத தொகையை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் விலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story