புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில்9 ஜோடிகளுக்கு திருமணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்;
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
9 ஜோடிகளுக்கு திருமணம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் திருமணங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்தந்த கோவில் வாயிலாக இலவசமாக நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி அவ்வப்போது இலவச திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் தஞ்சை மண்டல இணை ஆணையரின் உத்தரவுப்படி நேற்றுகாலை தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், அந்த கோவில் சார்பில் 9 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்த திருமண ஜோடிகளுக்கு 4 கிராம் தங்கதாலி, பட்டு சேலை, பட்டு வேட்டி, கட்டில், மெத்தை, பீரோ, கிரைண்டர், மிக்சி, மின் விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள், மளிகைப் பொருட்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
பேராவூரணி
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அரசாபகரன், சேதுராமன், செல்வி, சுப்பையன் மற்றும் கோவில் பணியாளர்கள், மணமக்களின் இருவீட்டார்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதே போல் பேராவூரணி நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் 2 ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.