பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சுதந்திர ஓட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சுதந்திர ஓட்டம் 31-ந் தேதி நடக்கிறது
75-வது இந்திய சுதந்திர தின விழா நிறைவினை முன்னிட்டும், மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் மற்றும் சர்தார் வல்லபபாய் படேல் 147-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டும், மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறையின் வழிகாட்டுதல்களின் படி தூய்மையாகவும், தேசிய ஒற்றுமையும் முன்னிறுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) 'பிட் இந்தியா சுதந்திர ஓட்டம்' என்ற நிகழ்ச்சி அனைத்து வகை உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளிலும் நடத்தப்பட உள்ளது.
இதில் மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட தூரம் ஓடிக் கொண்டே பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாட்டுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் இந்த ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் https://fitindia.gov.in/register என்ற இணையதளம் வழியாக தங்களது பள்ளி மற்றும் கல்லூரிகளின் பெயர்களை உடனடியாகப் பதிவு செய்து இந்த ஓட்டத்தினை நிறைவு செய்த பின் பங்கேற்பாளர்களது பெயர்களையும், அவர்கள் நிறைவு செய்த தூரத்தினையும், புகைப்படங்களையும் நாளை காலை 11 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற செய்யப்பட வேண்டும்.
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் பள்ளி சீருடைகள் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்றி இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.