ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரிப்பு-தீ மூட்டி குளிர்காய்ந்த பொதுமக்கள்
ஊட்டியில் நேற்று 3 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவானது. உறைபனி தாக்கம் அதிகரித்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி
ஊட்டியில் நேற்று 3 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவானது. உறைபனி தாக்கம் அதிகரித்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உறைபனி தொடக்கம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சீதோஷ்ன நிலை மாறுபாடு காரணமாக இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது.
அந்த வரிசையைத் தொடர்ந்து பனிக்காலமும் 20 நாட்கள் தாமதமாக கடந்த நவம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கியது.
இதையடுத்து ஊட்டியில் மீண்டும் மழை ஆரம்பித்ததால் பனிப்பொழிவு குறைந்து ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் கடந்த வாரம் பனிப்பொழிவு தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஊட்டியில் பனிப்பொழிவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அதாவது காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் மாலை முதல் மறுநாள் விடியற்காலை வரை கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
3 டிகிரி செல்சியஸ்
இதன்படி ஊட்டியில் தாவரவியல் பூங்கா தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தயம் மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து காணப்பட்டது.
இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி கொட்டி கிடக்கிறது. இதனால் பச்சை புல்வெளி மீது வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் தோற்றம் அளிக்கிறது. இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் குளிர் காரணமாக கடும் அவதிப்படுகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு இடையே ஊட்டியில் நிலவும் கடும் குளிரிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்கின்றனர். ஒரு சிலர் பனிப்பொழிவை செல்போன் மற்றும் வீடியோ கேமராக்களில் வீடியோ பதிவு மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.