கஞ்சா, குட்கா கடத்திய வழக்கில் கைதான 13 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
கிருஷ்ணகிரி, ஜூன்.13- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் கஞ்சா மற்றும் குட்கா கடத்திய வழக்குகளில் கைதான 13 பேரின் வங்கி கணக்குகள் காவல் துறை சார்பில் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் கஞ்சா மற்றும் குட்கா கடத்திய வழக்குகளில் கைதான 13 பேரின் வங்கி கணக்குகள் காவல் துறை சார்பில் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
பெண் கொலை
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேற்று கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கந்திகுப்பம் போலீஸ் நிலைய எல்லையில் மலைப்பகுதியில் கடந்த 8-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற லட்சுமி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கந்திகுப்பம் போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியான திம்மராஜை கைது செய்தனர். குற்றவாளியை பிடித்த துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், ஏட்டுகள் முருகேசன், குமார், பிரகாஷ், சுரேஷ் மற்றும் தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள். இவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது.
வங்கி கணக்குகள் முடக்கம்
கடந்த 3 மாதத்தில் மாவட்டம் முழுவதும் குட்கா, கஞ்சா கடத்திய 13 பேரின் வங்கி கணக்குகள் காவல் துறை சார்பில் முடக்கப்பட்டுள்ளன. குட்கா, கஞ்சா கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும். கந்து வட்டி கொடுமை தொடர்பாக மொத்தம் 7 புகார்கள் வந்தன. அதில் ஒரு புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற 6 புகார்களின் மீது விசாரணை நடந்து வருகிறது.
ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புகளை உடைத்து பாதை அமைத்து, அதன் வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடக்கும் போது விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. அந்த இடங்களில் வாகனங்கள் கடக்காத வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவுடிகள் கண்காணிப்பு
ஓசூரில் ரவுடி ஒருவரை கொலை செய்ய வந்த கூலிப்படை கும்பலை கைது செய்துள்ளோம். ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள அனைத்து ரவுடிகளின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கந்திகுப்பம் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் வெகுமதி வழங்கினார்.